News

தூத்துக்குடி விமான நிலையம் விரிவுபடுத்தும் பணிக்கு 586 ஏக்கர் கையகப்படுத்த முடிவு!
January 9, 2010, 12:01 PM

தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமானங்களும் வந்து செல்லும் வகையில் விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.​ இதற்காக 586 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து சுமார் 15 கி.மீ.​ தொலைவில் உள்ள வாகைகுளம் விமான நிலையம்,​​ கடந்த 1992-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.​ முதல் விமான சேவை 1992-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கியது.​ தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வாயுதூத் விமானம் இயக்கப்பட்டது.​ இந்த சேவை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

பின்னர் என்.இ.பி.சி.​ நிறுவனம் 1996 பிப்ரவரி 10-ம் தேதி முதல் விமான சேவையை தொடங்கியது.​ இந்த சேவையும் 6 மாதங்களோளோடு முடிந்துவிட்டது.​ இதனை தொடர்ந்து பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகள் தூத்துக்குடி விமான நிலையம் எந்த விமான சேவையும் இன்றி பெயரளவுக்கு விமான நிலையமாக இருந்துவந்தது.​ ​​ இந்நிலையில்,​​ ஏர்டெக்கான் நிறுவனம் கடந்த 2006 ஏப்ரல் 1-ம் தேதி மீண்டும் விமான சேவையைத் தொடங்கியது.​ ஏர்டெக்கான் நிறுவனம் பின்னர் கிங்பிஷர் நிறுவனமாக மாறியதால் தற்போது தூத்துக்குடியில் இருந்து தினமும் கிங்பிஷர் விமானம் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த விமான சேவை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.​ தற்போது சென்னைக்கு 72 இருக்கைகள் ​ கொண்ட கிங்பிஷர் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.​ தினமும் இந்த விமானத்தில் முழு அளவில் பயணிகள் சென்று வருகின்றனர்.​ இந்த விமான சேவை வெற்றிகரமாக அமைந்துள்ளதால் மேலும் சில தனியார் நிறுவனங்களும் தூத்துக்குடிக்கு விமான சேவையைத் ​ தொடங்க ஆர்வமாக உள்ளன.​ சில நிறுவனங்கள் இது தொடர்பாக ஆய்வுகளையும் நடத்தியுள்ளன.​ ​ ஆனால்,​​ தூத்துக்குடி விமான நிலையம் சிறிய அளவில் இருப்பதாலும்,​​ போதுமான வசதிகள் இல்லாததாலும் மேற்கொண்டு விமான சேவைகள் தொடங்கப்படவில்லை.

இதையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்தது.​ இதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி தருமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையம்,​​ மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டது.
​அதன்பேரில்,​​ விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் தனியாரிடம் இருந்து 586 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.​ அதற்கான நிலம் ​ அடையாளம் காணப்பட்டுள்ளது.​ அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.​ 30.50 கோடி வரை ​ இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும் என ​ கணக்கிடப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியர் கோ.​ பிரகாஷ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.​ ரவிச்சந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.​​ நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும்.​ மாநில அரசு நிர்வாக அனுமதி அளித்த பின்னர் தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் தற்போதைய ஓடுதளம் 1,351 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது.​ இது 4.5 கி.மீ.​ தொலைவு உள்ளதாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.​ இதன் மூலம் ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்களை இயக்க முடியும்.​ ​ மொத்தத்தில் தூத்துக்குடி விமான நிலையம் அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச விமான நிலையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.