தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது என ஆட்சியர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று நடந்த "மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில்" செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்காக ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 10 தினங்களுக்குள் நிதி ஆதாரத்தைப் பொறுத்து பிளாஸ்டிக் பாலித்தீன் கவர் தடை செய்யப்படும். முதலாவதாக, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இந்த தடை அமலுக்கு வரும். தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை விரிவு படுத்தும் வகையில், விளை நிலம் இல்லாத பகுதிகளான 600ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து குடிசைமாற்று வாரிய திட்டத்தின் கீழ், எழில் மேட்டிக்ஸ் பயிற்சி மையத்தில் கணினி பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் கோ.பிரகாஷ் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், எழில் மேட்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கோ.எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.