தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சமத்துவப் பொங்கல் கபடி போட்டி இன்று (ஜன.13) நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் பா. ஷாஜூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான சமத்துவப் பொங்கல் கபடி போட்டிகள், தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறவுள்ளது. போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணியினர் கலந்துகொள்கின்றனர்.
மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட கபடி கழகத் தலைவரான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கவுள்ளார். மாவட்ட கபடி கழகச் செயலர் கிறிஸ்டோபர் ராஜன் கலந்து கொள்கிறார்.
இந்த போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தூத்துக்குடி மாவட்ட கபடி அணியினர் ஜன.17ஆம் தேதிமுதல் மதுரையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்கின்றனர்.