நெல்லை கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனைக் கொல்ல முயன்றது ஏன் என்பது குறித்து கைதான அவரது மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கடந்த 7ம் தேதி ஆள்மாறாட்டம் காரணமாக வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டது கடையம் எஸ்ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், சிவகாமியின் சகோதரர் கந்தசாமி, கள்ளபிரான், ஆகியோரை முதலில் கைது செய்தனர்.
நேற்று மதுரை நீதிமன்றத்தில் சிவகாமியின் சகோதரர் சுப்பிரமணியன் என்பவர் சரணடைந்தார். சிவகாமி, ஐயப்பன் ஆகிய இருவரும் நேற்று போலீசில் சிக்கினர். நாகர்கோவில் நீதிமன்றத்தில் கண்ணன் என்பவர் சரணடைந்தார். இவ்வழக்கில் இதுவரை 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
எஸ்ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என்னோடு வாழ விரும்பாதவர் உயிருடன் இருக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால்தான் அவரை கொலை செய்ய கூறினேன். என் குடும்பத்தினர் அவரிடம் எவ்வளவு அவமானம் அடைந்தார்கள். என்னால் அதனை ஜீரணிக்க முடியவில்லை.
இப்படிப்பட்டவருடன் வாழ்வதை விட அவரை கொல்வது சிறந்தது. அவர் ஒரு சந்தேக பேர்வழி. பெண்கள் விசயத்தில் மிகவும் மோசமானவர் என்று கூறியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சிவகாமி, ஐயப்பன் இருவரையும் விசாரணைக்கு பின் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு நீதிபதி விடுப்பில் சென்றிருப்பதால் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரையும் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். இருவரும் முகத்தை மூடியவாறு வந்தனர்.
நீதிபதி ராமானுஜம் வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை வரை 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் பாளை. மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.