News

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பொங்கல் ஆசியுரை!
January 14, 2010, 7:13 AM

தை பிறந்தால் பொங்கலோ பொங்கல் எனும் வாழ்த்தொலிகளும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதும், தை முதல் தேதி பெரிய பொங்கல் என்பது வழிவழியாக வந்தவை.

இதையே தமிழ் திருநாள் என்றும் சொல்வார்கள். வடக்கே இதை சங்கராந்தி என்றும் சொல்வார்கள். அனைத்தும் ஒன்றுதான். நல்ல உள்ளங்களும் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களாக மாறுவது தான் இந்தத் திருநாட்களில் முக்கியம்.

பண்டைய காலத்து மனிதன் காடுகளில், மலைகளில், குகைகளில் வாழ்ந்தான், மரத்தில் வாழ்ந்தான், இப்பொழுது மனித நேயம் அற்று வாழ்கிற காலத்திலோ குகையிலும், மரத்திலும் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் தீவிரவாதிகள் வாழ்கிறார்கள். அங்கிருக்கிற மிருகங்கள் அவர்களை கண்டு பயந்து நம்மை அழிக்க வருகின்றன.

ஏன் மனிதன் தீவிரவாதியாக மாறினான்? கொடூரமாக மாறினான்? அவனும் மற்றவர்கள் போல ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைதானே? ஏன் அந்த எண்ணங்கள் வளர்ந்தன? ஏன் அந்த நிலை வந்தது? இதையெல்லாம் சிந்தித்து சரிப்படுத்த வேண்டும்.

மலையிலிருந்து வரும் அருவி ஆறாக மாறி கடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. அந்தக் கடல் என்பது ஒரு எல்லைக்குள் இருந்து அளவோடு அலையாக வருகிறது. ஆனால் அது சீற்றம் அடையும் பொழுது, அது என்னாகிறது? அது அழிவை ஏற்படுத்துகிறது. மனிதனுடைய உள்ளங்களும் கடல் அலைபோல் அமைதியோடு இருந்தால்தான் அமைதியாக வாழ முடியும்.

தியானம் என்பதும் யோகா என்பதும் எல்லாம் இயற்கை உடைய நிழல்தான். அது ஒன்று கூடிச் செயல்படும் பொழுது, வருஷ‌ங்கள் மாறினாலும் கூட, நாட்கள் மாறினாலும் கூட, இயற்கை மாறுவது கிடையாது.

இயற்கை மாறாமல் இருப்பதால் ஐந்து பூதங்களும் ஒரே நிலையில் இருக்கின்றன. ஒரே நிலையில் இருக்கும்போது, மனித நேயமும் மாறுவது கிடையாது. மனிதன் எப்பொழுது மனம் மாறினானோ, திசை மாறினானோ, பாசம் மாறினானோ அப்போதே மனித நேயம் மாறிவிட்டது. மனிதன் நிலை மாறும்போது இயற்கை சீற்றங்களும் அதற்கு ஏற்றாற்போல் அழிவை ஏற்படுத்துகின்றன.

மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெய்யில் அடிக்கிறது. வெய்யில் அடிக்கிற காலத்திலே மழை பெய்கிறது. எதற்கும் உபயோகம் இல்லாமல் போகிறது. எப்பொழுது எது நடக்கும் என்பது தெரிவதில்லை. கடல் உள் வாங்குகிறது என்றால் அது அழிவுக்குத் தான். புலி பின் வாங்குகிறது என்றால் அது வேகத்திற்கு அறிகுறி.

உணவு உண்ணும்போது ருசி தெரிகிறது. அதே உணவு இரைப்பையில் உள்ளே சென்றபின் நல்ல உணவுகள் இரைப்பையில் இருந்து நரம்புகளுக்கும் அவயங்களுக்கும் சத்தாக அனுப்பப்படுகிறது. ஆகாத உணவு ஆகாத நோயை கொடுக்கிறது.

அதுபோல நம் எண்ணங்களும் உள்ளே சென்று நல்லவை நல்ல செயல்களாகவும் தீயவை தீய செயல்களாகவும் மாறி, நல்ல அல்லது தீய விளைவுகளை வாழ்வில் ஏற்படுத்துகின்றன.

தர்ம சிந்தனைகள் இருக்கும்பொழுது அள்ளிக் கொடுக்கிறோம். அப்படி அள்ளிக் கொடுப்பதால் மட்டும் பலன் கிடையாது. கொடுப்பதை சந்தோசமாக கொடுத்து, வழிகாட்டுதலிலும், பேசும் அன்பிலும், எந்த அளவிற்கு பணிவோடு, கனிவோடு செய்கிறோமோ அந்த அளவிற்கு தான் பலன் பெருகும்.

வருகிற ஆண்டு மோசமான ஆண்டு. ஒவ்வொரு துறையிலும் செயல்படும்போது, மிகவும் பொறுமையாக இருந்து, பிறர் சொல்வதை கேட்டு செயல்படுவது நல்லது. சொல்வது யாராக இருந்தாலும், அவன் எந்த நிலையில் பேசுகிறான், எப்படிப் பேசுகிறான் என்ற குறிப்பறிந்து, அந்த நிலைக்கேற்ப வேஷம் போட வேண்டும். ஆனால் அதுவே விஷமாக மாறிவிடக் கூடாது. வேஷம் போடுவது அவனைத் திருத்தி நல்ல வழிக்குக் கொண்டு வரத்தான். அவனது வார்த்தைகள் விஷமாக இருந்தாலும் அவனையும் நல்லவனாக மாற்றி வேடதாரியாக இல்லாமல் நல்லவனாகக் கொண்டு வரவேண்டும்.

வழிபாடு என்பது ஐம்புலனையும் ஒருமுகப்படுத்தி வணங்குவதுதான். தாய் தந்தையை வணங்கும்போது சிலையைக் கூட வணங்க வேண்டியது கிடையாது. தாய் தந்தையை வணங்கும்போது, சிலையை வணங்கும் போது, மனதை ஒருமுகப்படுத்துகிறாய். சிலை பேசுமா என்கிறாய். கல் பேச ஆரம்பித்தால், சிலை பேச ஆரம்பித்தால் உன் நிலை என்ன? சிலை பேச ஆரம்பித்துவிட்டால் உன்னுடைய உள்ளத்து ரகசியங்கள் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாட்டுப் பொங்கலும் சரி, பெரும்பொங்க‌லும் சரி, மனித நேயத்திற்கும், நல்ல உள்ளத்திற்கும், நல்ல எண்ணங்களுக்கும், செயல்பட வேண்டியவை தான். புதிய ஆடையை விட சுத்தமான ஆடையே முக்கியம். ஆடையைப் போல மனதிலும் அழுக்கு கூடாது. போதை உண்டாக்குகிற பேச்சுக்களும், போதை உண்டாக்குகிற உணவுகளும், போதை உண்டாக்குகிற உணர்வுகளும், போதை உண்டாக்குகிற காட்சிப் பொருட்களும் அழிவுக்குத்தான் வழி வகுக்குமே தவிர நன்மைக்கு வழி வகுக்காது.

அமைதி! அமைதி! அமைதி!  இதுதான் இன்றைய தேவை.

எப்பொழுது தாய் த‌ந்தைய‌ரை வ‌ண‌ங்குகிறானோ, எப்போது ச‌கோத‌ர‌த்துவ‌ம் என்ப‌தை ம‌ன‌ம் ஏற்கிற‌தோ அதுவே ம‌னித‌னுக்கு ந‌ல்ல‌ நாள். அது இந்த‌ பொங்க‌ல் நாளாக‌வாவ‌து இருக்க‌ட்டும்.


வாச‌க‌ர்க‌ளுக்கும், பொதும‌க்க‌ளுக்கும், செவ்வாடைத் தொண்ட‌ர்க‌ளுக்கும் பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள்.

                    அம்ம‌வின் ஆசி!                                               ஓம் ச‌க்தி!  ஆதி ப‌ராச‌க்தி!


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.