News

தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து!
January 7, 2010, 2:54 PM

மானூர் அருகே தொழிற்சாலை கட்டுமானப்பணி நடந்த போது மேல்தள கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள எட்டான்குளத்தில் மின் காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் உதிரிப் பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்துவருகிறது. வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிற்சாலையில் முதல்தளம் கட்டுமானப் பணி பெருமளவு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் தள கட்டுமானப்பணி தற்போது நடந்து வருகிறது. இரண்டாம் தளத்தில் கான்கிரீட் தூண்களை இணைத்து மேற்புறத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. காலை முதல் மாலை வரை தொழிலாளர்கள் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை தளம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. அப்போது ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் எதிர்பாராத வகையில் இடிந்து கீழே விழுந்தது. தொழிலாளர்கள் மீது தளத்தின் இடிந்த பாகங்கள் விழுந்தது. தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினர்.

தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் சிராதராவை சேர்ந்த நரேந்திர நாயக்(24) உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சந்தாரு சீதாராம்(25), சந்தீப்பாப்ரோ, பிரதீப்அம்ரோ, ஜார்க்கண்டை சேர்ந்த ரவிக்குமார் நாயக், மேற்கு வங்கத்தை சேர்ந்த தாவீதுமகிதோ படுகாயமடைந்தனர். இவர்கள் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

 
தீயணைப்பு கோட்ட அலுவலர் சுப்பிரமணியன், பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சுயம்பு தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நெல்லை தாசில்தார் சுப்பையா, தாழையூத்து டி.எஸ்.பி., ராஜராஜன் தொழிற்சாலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்திவருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்வா, திருநெல்வேலி

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.