எஸ்.ஐ. படுகொலை: நெல்லையில் பயங்கரம்!
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
அப்போது அந்த வழியாகச் சென்ற அமைச்சர்களின் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டு இருவரைப் பிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் உப்பத்தூரைச் சேர்ந்தவர் இரா. வெற்றிவேல். ஆழ்வார்குறிச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற இவர், புளியங்குடி அருகேயுள்ள முள்ளிகுளத்தில் வசித்து வந்தார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் வந்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆழ்வார்குறிச்சி கடனாநதி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, அங்கு வந்த கும்பல் வெற்றிவேல் மீது பைப் வெடிகுண்டை வீசியது. நிலை தடுமாறி கீழே விழுந்த வெற்றிவேலை அக் கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் அப் பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.
அப்போது அவ் வழியாக மாநில அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், டி.பி.எம். மைதீன்கான், ஆட்சியர் மு. ஜெயராமன் உள்ளிட்டோர் காரில் கடையநல்லூர் சென்று கொண்டிருந்தனர்.
புகைமண்டலமாக காணப்படுவதைப் பார்த்து அவர்கள் கார் நிறுத்தப்பட்டது. உடனே, அமைச்சருடன் பாதுகாப்புக்கு வந்த போலீஸôர் அக் கும்பலை நோக்கி 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். அக் கும்பல் அங்கிருந்து தப்பியது. அப்போது சம்பவ இடத்தில் நின்றுகொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்தனர்.
இதற்கிடையே, பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் வெற்றிவேலுக்கு சிகிச்சை அளிக்க அமைச்சர்கள், ஆட்சியர் நடவடிக்கை எடுத்தனர். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. வெற்றிவேலின் கழுத்துப் பகுதியில் பலத்த காயமிருந்தது. அவரது வலது கால் துண்டானது.
இதையடுத்து, "108' ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் வெற்றிவேல் இறந்தார்.
திருநெல்வேலி டி.ஐ.ஜி. பெ. கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ராகர்க், சேரன்மகாதேவி துணை ஆட்சியர் கே. வீரராகவராவ், பயிற்சி துணை ஆட்சியர் குஹாபூனம் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தப்பியோடிய கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் (டி.என். 72 எக்ஸ் 444), சம்பவ இடத்தில் இருந்து 2 அரிவாள்கள், 3 நாட்டு வெடிகுண்டுகள், வெடித்த நிலையில் கிடந்த பைப் வெடிகுண்டு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.