வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டதாக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு மக்களும், வானிலை ஆய்வு மையத்தினரும் வந்திருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் மழை வரவுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திர வங்க கடல் ஓரத்தில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஆங்காங்கே மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுவாக தமிழகத்தில் வறண்ட கால நிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.