News

தலைமைச் செயலகத்தில் ரஜினி: திருட்டு விசிடியைத் தடுக்க கோரிக்கை!
January 8, 2010, 8:56 PM

திருட்டு விசிடி ஒழிப்பு தொடர்பாக முதல்வரைச் சந்திந்து ஆலோசனை நடத்தினர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள்.

ஜக்குபாய் திரைப்படம் திரைக்கு வரும் முன்பே இணைய தளங்களில் வெளியானதில் திரையுலகம் ஆடிப்போனது. அடுத்த அதிர்ச்சியாக இந்தப் படத்தை டிவிடிகளில் ரூ 15-க்கு விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் பெரும் நஷ்டம் ஆகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் குமுறினர். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, அதில் ரஜினி மற்றும் கமல்ஹாஸனை பங்கேற்க வைத்தனர்.திருட்டு விசிடி வெளிவர காரணம் திரையுலகில் உள்ள சிலர்தான் என்றும், அவர்கள் யாரென்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, ஜக்குபாய் டிவிடிகளை அச்சடித்து விநியோகிப்போரை தொடர்ந்து கைது செய்து வருகிறது தமிழக காவல்துறை.இந்நிலையில், இன்று மாலை (வெள்ளிக்கிழமை) முதல்வரைச் சந்தித்தனர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர். திருட்டு விசிடி ஒழிப்பில் தமிழக அரசு காட்டும் அக்கறைக்கு நன்றி தெரிவித்த ரஜினி,இந்த திருட்டுக்கு காரணமானவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.

இணையதளங்களில் புதிய படங்கள் வெளியாவதைத் தடுக்க சைபர் க்ரைம் பிரிவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.பின்னர் திருட்டு விசிடி ஒழிப்பு தொடர்பான எழுத்துப் பூர்வமான மனுவை முதல்வரிடம் ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட கலைஞர்கள் வழங்கினர்.பின்னர் முதல்வருடன் ரஜினி, கமல் நடத்திய நீண்ட ஆலோசனையின் முடிவில்  எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

திரைப்படங்களை ஒளிநாடா மற்றும் குறுந்தகடுகளாக திருட்டுத்தனமாக விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.மத்திய அரசின் காப்பி ரைட் சட்டம் 1957ன் படி மேலே குறிப்பிடவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்ப்படும்.இந்தச் சட்டத்தின்படி குறைந்த பட்ச சிறை தண்டனையாக ஆறு மாதங்கள் அவர்களுக்குக் கிடைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த சட்டப் பிரிவுகளை மேலும் தீவிரமாக்குவதற்காக மத்திய அரசிற்கு தமிழக அரசின் சார்பில் பரிந்துரை அனுப்பப்படும்.அரசின் சார்பில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே நேரத்தில், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் துறை சார்ந்தவர்கள் மூலம் இந்த திருட்டு விசிடிகள் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சினிமாவின் அனைத்துப் பிரிவினரும் இதனை ஒரு முன் எச்சரிக்கையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.