News

திருட்டு வி.சி.டி.விற்றால் குண்டர் சட்டம்: த‌‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை!
January 9, 2010, 10:25 AM

திருட்டு வி.சி.டி.யை விற்பவர்கள், வைத்திருப்பவர்கள், தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

நடிகர் சரத்குமார் நடித்த "ஜக்குபாய்'' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திருட்டு வி.சி.டி.யாக தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியானது. இது, திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் 'ஜக்குபாய்' பட விவகாரம் மற்றும் திருட்டு வி.சி.டி. பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதியை, திரையுலகினர் நேற்று மாலை சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பிரபு மற்றும் தயாரிப்புத்துறை சார்பில் ஏவி.எம்.சரவணன், ராமநாராயணன், சிவசக்தி பாண்டியன், அபிராமி ராமநாதன், குகநாதன் ஆகியோர் திரையுலகம் சார்பில் கலந்துகொண்டார்கள்.

செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, உள்துறை செயலர் மாலதி, நிதித்துறை செயலர் ஞானதேசிகன், சட்டத்துறை செயலர் தீனதயாளன், சென்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரன், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம், காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) ஜாபர்சேட் ஆகியோர் கலந்துகொண்ட‌ன‌ர்.இந்த கூட்டத்தில், முதலமைச்சரிடம் திரைத்துறையினர் மனு கொடுத்தன‌ர்.
 
 அதில், தங்களால் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் நாங்கள் அனுபவிக்க முடியாத நிலையில் திருட்டு வி.சி.டி. என்ற அரக்கன் தன் கோர தாண்டவத்தால் எங்களை அழுத்திக் கொண்டிருக்கிறான். பல ஆண்டு காலமாக இந்த அரக்கனை ஒழித்து எம்மை விடுவிக்க யாராலும் முடியவில்லை. தாங்கள் கருணை வைத்தால் மட்டுமே இந்த திருட்டு வி.சி.டி. என்ற அரக்கனை ஒழிக்க முடியும்.
 
அறுபது ஆண்டு காலத்துக்கும் மேலாக திரையுலகில் மூத்த கலைஞராய் திகழ்ந்து வரும் தாங்கள்தான் தமிழ் திரையுலகை காப்பாற்ற முடியும். வேறு யாராலும் நிச்சயம் முடியாது. திருட்டு வி.சி.டி. கும்பலை ஒழித்து, தங்கள் தாய் வீடான கலையுலகை காப்பாற்றுங்கள் என்று கீழே கையொப்பமிடும் நாங்கள் அனைவரும் உங்களை இருகரம் கூப்பி பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் எ‌ன்று கூறியுள்ளன‌ர்.
 
 இதைத் தொடர்ந்து, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், திரைப்படங்களை ஒளிநாடா மற்றும் குறுந்தகடுகளாக திருட்டுத் தனமாக விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் 'காப்பி ரைட்' சட்டம் 1957-ன்படி மேலே குறிப்பிட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த சட்டத்தின்படி குறைந்தபட்ச சிறைத்தண்டனையாக ஆறுமாதங்கள் அவர்களுக்கு கிடைக்க அரசின் சார்பில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த சட்டப்பிரிவுகளை மேலும் தீவிரமாக்குவதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் பரிந்துரை அனுப்பப்படும்.

அரசின் சார்பில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே நேரத்தில் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மூலமாக இந்த திருட்டு வி.சி.டி.கள் பரவுவதற்கு வழிவகுக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்களின் பல்வேறு பிரிவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறு‌த்‌தியு‌ள்ளது.

செய்யது,சென்னை

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.