News

சப்- இன்ஸ்பெக்டர் கொலை: குற்றவாளிகளை நேரில் பார்த்தேன் கலெக்டர் வாக்குமூலம் !
January 9, 2010, 9:45 PM
ஆழ்வார்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை கொலை செய்த கொலையாளிகளை நான் பார்த்தேன் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கடந்த 7 ம் தேதி மர்ம கும்பலால் வெடி குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தின் போது அந்த வழியே காரில் வந்த தமிழக சுகாதரத்துறை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், மாவட்ட கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் வந்தனர்.ஆனால், அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரியை காப்பாற்றவில்லை என்று கூறப்படுகின்றது.

இந் நிலையில், இது குறி்த்து திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,கடந்த ஜனவரி 7 ம் தேதி அமைச்சர்களுடன் ஆய்வு பணிக்கு நான் சென்றிருந்த போது மதியம் 2.40 மணிக்கு இந்த துயர சம்பவம் நடைபெற்றது.இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு சில நிமிடத்தில் வந்த அமைச்சர்களும், நானும் காரில் இருந்து இறங்கிவிட்டோம்.ஆனால் அங்கு, ஒரே புகைமண்டலமாக இருந்ததால், ஒரு நிமிடம் எங்களுக்கு எதுவுமே ஓடவில்லை. இந்த சம்பவத்தின் போது பொது மக்கள் யாரும் அங்கு இல்லை. நாங்கள் 6 பேர் மட்டுமே நின்றோம்.

இந்த சம்பவத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை நான் நன்றாகவே பார்த்தேன். எங்களுடன் 6 வாகனங்கள் வந்திருந்தன. பாதுகாப்புக்கு வந்த போலீசார் ஒரு வாகனத்துடன் கொலையாளிகளை பிடிக்க சென்றனர்.அந்த கும்பல் போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். பாதுகாப்பு போலீசார் குற்றவாளிகளை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த நிலையில், நாங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி அங்கு சப் - இன்ஸ்பெக்டர் விழுந்து கிடப்பதை பார்த்து அருகில் சென்றோம். எங்கள் கால் அருகே வெடிக்காத குண்டு கிடந்ததால், அதை கருத்தில் கெண்டு,உடன் வந்த அமைச்சர்கள் உயிரையும் கவனத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் அடுத்த நடவடிக்கையில் ஈடுபட்டோம். வெற்றிவேலின் உடலின் இருந்து வெளியேறிய ரத்தத்தை கட்டுப்படுத்த அமைச்சருக்கும், எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் போர்த்தப்பட்ட சால்வையை எடுத்து கட்ட சொன்னோம்.மேலும், 108 ஆம்புலன்சுக்கு நான் தான் தகவல் கொடுத்தேன்.

ஒரு ஆம்புலன்ஸ் தென்காசியிலும், மற்றொன்று சேர்மாதேவியிலும் நின்றதால் அது வர தாமதமாகும் என எண்ணி எங்களுடன் வந்த மற்றொரு பாதுகாப்பு வாகனத்தில் சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பிவைத்தோம்.அமைச்சரின் உதவியாளர், எனது டபேதார், சுகாதாரத்துறை டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வெற்றிவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தவாரே பாதுகாப்பு வாகனத்துடன் சென்றனர்.உடனே நான் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு போன் செய்து டாக்டர் மற்றும் நர்சுகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளேன். அம்பையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் இதுபோன்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.

துரிதமாக செயல்பட்டு வெற்றிவேலை காப்பாற்ற தீவிரமாக போராடினோம். இதில் காலதாமதம் எதுவும் செய்யவில்லை.கொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.தமிழக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது எனறு கருதியே மாவட்டக் கலெக்டர் இவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த கொலை சம்பவத்தில் முறையான விசாரணை தேவை என்று தேமுதிக வலியுறுத்தி உள்ளது.
செல்வா,நெல்லை

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.