விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை எனது வீட்டில் வைத்து நான் பராமரிப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கின்போது மதி்முக பொதுச் செயலாளர் வைகோ, தொலைபேசி மூலம் கூடியிருந்த மக்களிடையே பேசினார். அது ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.
இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது.
பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறின் பிரதிநிதிகள், இறுதிச் சடங்கில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.