சென்னை-திருச்சி வரை மின்என்ஜின் பொறுத்தப்பட்டு பயணிகள் இரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது.
தென்னக இரயில்வே துறை மூலம் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தினமும் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரயில்களில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதனால் இரயில்வே துறைக்கு அதிக செலவும், சுற்றுப்புற சூழல் மாசுபாடுவதை மையமாக கொண்டு சென்னை-மதுரை வரை முதலில் மின்சாரத்தில் இரயில் போக்குவரத்து இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக சென்னை-விழுப்புரம் வரை மின்சார வயர்கள் அமைக்கப்பட்டு மின்என்ஜின் பொறுத்தப்பட்டு இரயில் போக்குவரத்து நடந்து வந்தது. இதனை தொடர்ந்து விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் வழியாக திருச்சி வரை மின்மயமாக்கும் பணிகள் முழுவீச்சில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று முடிவடைந்தது.இந்த மின்மயமாக்கப்பட்ட பாதையில் இரயில்வே அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி தற்போது சரக்கு இரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ஒரு சில பயணிகள் இரயிலும் மின் என்ஜின் பொறுத்தப்பட்டு இயக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு இரயிலும் விழுப்புரம் சந்திப்பில் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின் என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் ராக்போட், குருவாயூர், பல்லவன், பாண்டியன், பொதிகை, மங்களூர், அனந்தபுரி ஆகிய 7 வண்டிகளை முதற்கட்டமாக சென்னை-திருச்சி வரை மின்என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது என்று இரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த மின்என்ஜின் பொறுத்தப்பட்டு சென்னை-திருச்சி வரை ஒவ்வொரு பயணிகள் இரயில்களாக மாற்றம் செய்யப்பட்டு இன்னும் சில தினங்களில் அனைத்து இரயில்களும் மின்சாரம் மூலம் இயக்கப்படும் என தெரிகிறது. இதனால் ரெயில் பயணத்தின் நேரம் மிச்சப்படுவதோடு, சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.