News

பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்க்க வே‌‌ண்டும்:திருமாவளவன்!
January 12, 2010, 6:31 PM

இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள இந்நேரத்தில் தமிழக மக்கள் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் லட்சக்கணக்கானோர் சிங்கள ராணுவ வதை முகாம்களில் அடைபட்டு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆண்டில் இதே நாள்களில்தான் முல்லைத் தீவுப் பகுதிகளில் எமது தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமற்ற முறையில் கொத்துக்கொத்தாய்ப் படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு.

சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், போராளிகளும், வெள்ளைக்கொடியேந்தி வந்த தலைவர்களும் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர். அந்த ரத்தக் கறை இன்னும் ஈழமண்ணில் காயவில்லை.அத்தகைய துக்கமும் துயரமும் நம் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில், இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி அன்று பிரபாகரன் தந்தையார் வேலுப்பிள்ளை சிங்கள ராணுவ முகாமில் திடீரெனக் காலமாகிவிட்டார்.

பல இலட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் சொந்த பந்தங்களை பலிகொடுத்து, துக்கத்தில் விழுந்து கிடக்கின்ற நிலையிலும், வேலுப்பிள்ளை அவர்களை இழந்து வாடும் நிலையிலும், நமது இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடுவதை தமிழக மக்கள் தவிர்க்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று ‌திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.