தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத மோசமான நிலை நிலவும் போது, பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியுமா என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் காவல்துறை துணை ஆய்வாளராகப் பணியாற்றி வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் வசிக்கும், சங்கரன்கோவிலை அடுத்துள்ள முள்ளிகுளம் வீட்டிற்கு சென்ற வைகோ குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர். சென்னை உட்பட எல்லா இடங்களிலும் பண பலம், ஆள் பலம் உள்ளவர்கள் எதையும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
துணை ஆய்வாளர் வெற்றிவேல் வெட்டப்பட்டு கிடந்த போது, “கோல்டன் ஹவர்” எனப்படும் பொன்னான மணித்துளிகள் வீணடிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்காமல், ஏதாவது ஒரு வாகனத்தில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்” என்றார்.