News

தமிழக புதிய சட்டசபைக் கட்டிடம்: மார்ச் 13ல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்!
January 13, 2010, 6:42 PM

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் தமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமது சென்னை பயணத்தையும், புதிய தலைமைச் செயலக கட்டிட திறப்பு விழாவில் தாம் பங்கேற்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் எழுதிய கடிதத்தின் நகல் இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.முதல் அமைச்சரின் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அழைப்பை ஏற்று, தாம் சென்னை வந்து கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சியையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழக அரசுடன் கலந்து பேசி நிகழ்ச்சி குறித்த விவரங்களை இறுதி செய்யுமாறு தமது அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.சுமார் 425 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தலைமைச் செயலகம் அமைக்கும் பணிகளை முதல் அமைச்சர் கருணாநிதி அவ்வப்போது நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளைக் கூறி வருகிறார்.2010-11ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 2 நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்த தமிழக அரசின் கடைசி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, பல உறுப்பினர்கள் தங்களின் பிரியா விடையை உரையில் தெரிவித்தனர்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.