News

காணும் பொங்கல்:மெரினா கடலில் குளிக்க த‌டை!
January 13, 2010, 6:53 PM
காணும் பொங்கலன்று மெரினா கடலில் குளிக்கவும், படகில் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:  பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மாம்பலம், சவுந்திரபாண்டியனார் அங்காடி, கோடம்பாக்கம், புரசைவாக்கம், மயிலாப்பூர், லஸ் கார்னர், மெரினா, எலியட்ஸ் பீச், கோயில்களில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் மெரினா கடற்கரையில் குதிரை படையினர் ஈடுபடுவார்கள். 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 16ம் தேதி காணும் பொங்கலன்று தமிழ்நாடு அரசு சுற்றுலா மையம், சர்க்கஸ், மெரினா கடற்கரை, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, எலியட்ஸ் பீச், கிண்டி சிறுவர் பூங்கா போன்ற இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கடலில் குளிக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் உடைந்த கப்பல் உள்ள பகுதியில் யாரும் குளிப்பதற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு கட்டுமரம் மற்றும் இதர படகுகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் பொதுமக்களை ஏற்றி கொண்டு படகு சவாரி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை பகுதிகளில் 35 மீனவர்கள் அடங்கிய உயிர் காக்கும் நீச்சல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெரிசல் மற்றும் நீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

எல்லா முக்கிய பகுதிகளிலும், சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அவசர உதவிக்கு 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் தகவல் கொடுக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.