|
பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் மரணம்!
December 30, 2009, 10:07 AM
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான விஷ்ணுவர்தன் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடிகர் விஷ்ணுவர்தனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து மைசூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 3 மணியளவில் விஷ்ணுவர்தன் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவர்தன் இறந்த போது அவரது மனைவி பாரதி, மருமகன் அனிருத் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுவரை 197 படங்களில் நடித்துள்ள விஷ்ணுவர்தனின் உடல் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தெரிகிறது. விஷ்ணுவர்தன் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக கர்நாடக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
|