News

முத்தரப்பு கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை மோதல்!
January 4, 2010, 10:20 AM

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்த்து வங்கதேசம் மோதுகிறது. பகல், இரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டி மிர்பூரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் இன்று தொடங்குகிறது. முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் தொடரை இழந்தாலும் இலங்கை அணி சிறப்பாக விளையாடி அசத்தியது. நட்சித்திர வீரர்கள் ஜெயவர்தனே, கந்தாம்பி, சமரவீரா ஆகியோர் பார்மில் இல்லாத போதும் தில்ஷன், தரங்கா, ஜெயசூரியா, சங்கக்கரா அதிரடியில் அந்த அணி எளிதாக 300 ரன்னை எட்டி விடுகிறது.
 
பந்து வீச்சுதான் இலங்கைக்கு கவலை தருகிறது. முன்னணி வீரர்கள் மலிங்கா, மெண்டிஸ், ஜெயசூரியா, ஜெயவர்தனே ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. உள்ளூரில் விளையாடுவதால் சற்று கூடுதல் பலத்தோடு வங்கதேசம் களம் இறங்குகிறது. காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மோர்டசா இந்த தொடரில் பங்கற்காதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தரவரிசையில் இலங்கையை விட பின் தங்கியிருந்தாலும் ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை எந்த அணிக்கும் ‘ஷாக்’ கொடுப்பதில் வங்கதேச அணியினர் கில்லாடி. உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை வங்கதேசம் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் பங்கேற்கம் 3 அணிகளும் வலிமையாக இருப்பதால் ஒவ்வொரு ஆட்டத்திலும் ‘அனல்’ பறக்கும் என்று நம்பலாம். எல்லா ஆட்டங்களையும் நியோ ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.