வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கையை சந்திக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களை இந்திய அணி வென்றது. கடைசியாக நடந்த, இரு அணிகள் பங்கேற்ற 7 ஒரு நாள் தொடர்களில் 6ல் கோப்பை வென்றுள்ளது.
சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-1 என வென்று, அபார நம்பிக்கையில் உள்ளது. முத்தரப்பு தொடரில் மீண்டும் இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றன. இந்திய அணியின் "சீனியர்' சச்சின் ஓய்வில் இருந்தாலும், அணியின் பேட்டிங்கில் பாதிப்பு இருக்காது. சேவக்குடன், காம்பிர் மீண்டும் ஒருநாள் போட்டியில் இணைந்து துவக்கம் தரவுள்ளார். ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.
"மிடில் ஆர்டரில்' கேப்டன் தோனி, ரெய்னா, விராத் கோஹ்லி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவுவார்கள். பன்றிக்காய்ச்சல் குணமடைந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இன்று முழு நம்பிக்கையுடன் இலங்கையை எதிர் கொள்கிறார். இவருடன் ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, சுதீப் தியாகி அணிக்கு கைகொடுக்க காத்திருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சு பணியை வழக்கம் போல ஹர்பஜன் சிங் கவனித்துக் கொள்வார். தவிர, ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவும் கேப்டனுக்கு தோள் கொடுப்பார் என நம்பலாம்.