முத்தரப்பு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையிடம் பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.
முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்களை எடுத்து வெற்றி கண்டது.
டாஸ வென்ற இலங்கை ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கம்பீரும், சேவாகும் களமிறங்கினர். கம்பீர் 8 ரன்களிலேயே வெளியேறினார். இதைத் தொடர்ந்து வந்த விராட் கோலியும் 9 ரன்கள் எடுத்த நிலையில் வெலகெடேரா பந்தில் வீழ்ந்தார்.
பின்னர் சேவாக்கும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சேவாக் வழக்கம் போல அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 9 பெüண்டரிகள் அடங்கும்.
இதைத் தொடர்ந்து 4வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங்கும், கேப்டன் தோனியும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். ÷அணியின் ஸ்கோர் 170-ஆக இருந்தபோது தோனி ஆட்டமிழந்தார். 70 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார் அவர். யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி ஒரு நாள் போட்டிகளில் தனது 43-வது அரை சதத்தைக் கடந்தார். 74 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ரெய்னா 46 பந்துகளில் 35 ரன்களும், ஜடேஜா 34 பந்துகளில் 39 ரன்களும் சேர்த்து வீழ்ந்தனர். ஹர்பஜன் ஒரு ரன்னும், ஜாகீர் கான் 2 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் நெஹ்ரா 4 ரன்களுடனும், ஸ்ரீசாந்த் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெலகெடேரா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். துஷாரா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடத்துவங்கியது இலங்கை. தரங்கா 30, திரிமன்னே 22, சங்ககரா 60, கண்டம்பி 8, ரணதேவ் 4 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஆனால் அபாரமாக ஆடிய சமரவீரா ஆட்டமிழக்காமல் 106 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். மறுமுனையில் ஆடிய திசாரா பெரேரா 36 ரன்களைச் சேர்த்தார். சதமடித்த சமரவீரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.