தமிழகத்தில் இருந்து ஆந்திரா பிரிந்து போனதால் அதற்கு பழி வாங்கவே இப்போது ஆந்திராவை உடைக்க தமிழகம் சதி செய்கிறது என்று மறைந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமராவி்ன் மனைவியும் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவியுமான லட்சுமி பார்வதி கூறினார்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் நடந்த புத்தக கண்காட்சி தொடக்க விழாவி்ல் பங்கேற்க லட்சுமி பார்வதி நிருபர்களிடம் பேசுகையில், ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்கக் கோரி சந்திரசேகர ராவ் சமீபத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அவர் 11நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததாக தெலுங்கானா மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவர் முதல்வர் பதவியை வகிப்பதற்கும், தற்போது எம்எல்ஏ பதவிகளில் இருக்கும் தனது மகன்- மருமகன் மற்றும் மகள் ஆகியோரை அமைச்சர்களாக்கவும் ஆசைப்படுகிறார்கள். இதனால் தான் தனி மாநிலம் கேட்கிறார். அவரது சுயலாபத்திற்காக அப்பாவி தொண்டர்கள், மாணவர்களை தூண்டிவிட்டு தெலுங்கானா பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரால் ஆந்திர மாநிலமே ஸ்தம்பித்து போய்விட்டது.
தொடர்ந்து கலவரத்தை தூண்டி வரும் சந்திரசேகர ராவை நாடு கடத்த வேண்டும் அப்போது தான் ஆந்திராவில் அமைதி திரும்பும் என்றார்.
தெலுங்கானாவுக்கு எதிராக கடந்த மாதம் உண்ணாவிரதம் நடத்திய லட்சுமி பார்வதி, இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் மீது பழியைப் போட்டது நினைவுகூறத்தக்கது. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா பிரிந்து போனதால் அதற்கு பழி வாங்கவே இப்போது ஆந்திராவை உடைக்க தமிழகம் சதி செய்கிறது என்றார் பார்வதி.
இந்நிலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரசு பஸ்கள் மீண்டும் ஓடத் தொடங்கியுள்ளன. ஆனால் பேருந்துகளில் கூட்டமே இல்லை. ஒரு பஸ்சில் டிரைவர், கண்டக்டரைத் தவிர்த்துவிட்டு 4, 5 பயணிகள் தான் பயணிக்கின்றனர்.
கண்டக்டர்களும், டிரைவர்களும் பயணிகளை கூவிக் கூவி அழைத்து ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 நாட்கள் சென்னையில் இருந்து தமிழக அரசு பஸ்கள் மற்றும் ஆந்திர அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் தமிழக அரசுக்கு சுமார் ரூ.30 லட்சமும், ஆந்திர அரசுக்கு சுமார் ரூ.1.5 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் தெலுங்கானா கோரி மாணவர்கள் பேரணி நடந்தது. இதனால் அங்கு ஏராளமான அதிரடிப்படை போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.