ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட்: பாக். அதிர்ச்சி தோல்வி!
பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியா எதிர்பாராத வகையில் 36 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.
மெல்பர்னில் நடந்த முதல் டெஸ்டில் 170 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. 1&0 என்று முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. டாசில் வென்று முதலில் பேட் செய்த ஆஸி. முதல் இன்னிங்சில் 127 ரன்னும், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 333 ரன்னும் எடுத்தன.
மூன்றாம் நாள் முடிவில் ஆஸி. 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 286 ரன் எடுத்திருந்தது. ஹஸி 73, சிடில் 10 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஹஸி தனது 11வது சதத்தை (பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சதம்) பதிவு செய்தார். சிடில் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 123 ரன் சேர்த்தது. போலிங்கர் டக் அவுட் ஆக ஆஸி. 381 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஹஸி ஆட்டமிழக்காமல் 134 ரன் (284 பந்து, 14 பவுண்டரி) எடுத்தார்.
அடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான், 139 ரன்னுக்கு பரிதாபமாக சுருண்டது. ஹாரிட்ஸ் 5, ஜான்சன் 3, போலிங்கர் 2 விக்கெட் வீழ்த்தினர். ஹஸி ஆட்டநாயகன் விருது பெற்றார்.