தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் 14,000 பேரை விடுவிக்க முடியாது:இலங்கை!
அரச கட்டுப்பாட்டிலுள்ள, மற்றும் பல்வேறு தடுப்பு நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களை விடுவிக்க முடியாது என்று சப்பிரகமூவா மாகாணத்தில், ரத்னபுரியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் டபிள்யூ.டி.ஜே செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தற்கொலை குண்டுதாரிகளும் அடங்குவர் எனவும், சிலர் மிகவும் ஆபத்தான சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்கள் எனக் கூறியுள்ளதோடு, இப்போது கிட்டத்தட்ட 14,000 புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி உடன் பேசும்போது, கிட்டத்தட்ட 11,000 புலி சந்தேக நபர்களே இப்போது தமது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறியுள்ளார். முன்னர் 12,000 பேர் இருந்ததாகவும், ஆனால் கடந்த சனிக்கிழமை 712 பேர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்கம் தற்போது மாறுபட்ட முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
மொத்தமாக அரச தடுப்புக் காவலில் எத்தனை விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பதை அரசாங்கம் திட்டவட்டமாக கூற மறுக்கிறது. இந்த எண்ணிக்கையை இதுவரை அவர்கள் சரியாக வெளியிடவில்லை. இது பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.