News

ராஜபக்சவை ஆதரித்துப் பிரச்சாரம்: பிரபாகரன் தந்தைக்கு துன்புறுத்தல்?
January 12, 2010, 7:05 PM

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையை ராஜபக்சவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்ய வைக்க முயற்சிகள் நடந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருந்த வேலுப்பிள்ளை சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரவு 8 மணியளவில் உயிரிழந்ததாக சிறிலங்க அரசு தெரிவித்தது.ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்ச தனக்கு ஆதரவாக அவரைப் பிரசாரம் செய்ய அழைப்பு விடுத்ததாக, அதனை வேலுப்பிள்ளை மறுத்ததால் அவரைத் துன்புறுத்தியதாகவும் அதிர்வு இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி வெள்ளமுள்ளி வாய்க்காலைக் ராணுவம் கைப்பற்றிய போது, பிரபாகரனின் பெற்றோரும் மக்களோடு மக்களாக ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றனர். இதில் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை தாமாகவே சென்று மிகவும் துணிச்சலாகவும் நேர்மையாகவும், நான் பிரபாகரனின் தந்தை என ராணுவத்தினரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து தந்தை வேலுப்பிள்ளை, தாய் ஏரம்புவை கைது செய்து சிறிலங்க ராணுவம் அவர்களை கொழும்பு கொண்டு சென்றது. தொடர் இடப்பெயர்வு, மனஉளைச்சல், ராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, வெளியுலகில் இருந்து பிரித்துவைத்த காரணத்தால் அவர்களுக்கு இருந்த நோய் இன்னும் அதிகமானது. சிறிலங்க அரசோ இவர்கள் மீது துளியளவேனும் இரக்கம் காட்டவில்லை. ஒரு பயங்கரவாதிகளைப் போல அதி உச்ச பாதுகாப்புக் கொண்ட ராணுவ முகாமில் இவர்களை அடைத்து துன்புறுத்தியது.

இந்நிலையில் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்போது சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆனார். இது ராஜபக்சவுக்கு பேரிடியாக இருந்தது. அப்போது சரத் தன் பிரச்சாரத்தில், “பிரபாகரனின் தாய் தந்தையரிடம் நான் பணம் வாங்கியாவது தேர்தலில் வெல்வேன்” எனக் கூறினார். இவர் கூற்று சற்று வினோதமானது. அதற்கு அரசியல் நாகரீகம் கூடத் தெரியாத மகிந்த, மிரண்டு எழுந்து சரத்தை சாடினார். நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக் கூறினார்.

இந்த வேளையில் வேலுப்பிள்ளை மீது ராஜபக்ச பார்வைபட்டது. அமரர் வேலுப்பிள்ளை சரளமாக சிங்களம் பேசுவார் என அறிந்த ராஜபக்சவும், பசிலும் அவரை தேர்தலில் களமிறக்க முயன்றனர். தனது மகன் பிரபாகரனை தூற்றியும், ராஜபக்சவை ஆதரித்தும் மேடைகளில் பேசினால் அவரை விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் வேலுப்பிள்ளை அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரை வயதானவர் என்று கூடப்பாராமல் துன்புறுத்தியுள்ளது சிறிலங்க அரசு. இதன் காரணமாக மேலும் நோய் வாய்பட்ட வேலுப்பிள்ளைக்கு, மருத்துவ உதவிகளையும் நிறுத்தி அவரை அடிபணிய முயன்றிருக்கிறது ராஜபக்ச அரசு.

நோய்வாய்பட்ட வேலுப்பிள்ளைக்கு தகுந்த மருத்துவ உதவிகளைக் சிறிலங்க அரசு கொடுக்காத காரணத்தால் அவர் உயிரிழந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.