இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. பைனாவு இதன் தலைநகரம். இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான இது ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
இங்கு, இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இடுக்கி அணை கேரள மாநிலத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் (arch dam) இது 2வது இடத்தை பிடித்துள்ளது. இதன் உயரம் 167.68 மீட்டர்கள்.
ஓணம், புத்தாண்டு விழா காலங்களில், மட்டும் இங்கு படகு சவாரி செய்யலாம். தற்போது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு இங்கு சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு படகுகள் இயக்கப்படும் நாட்கள் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.
கேரள மின்வாரியத்தின் சார்பில் ஒரு படகும், வணிகத்துறையின் சார்பில் ஒருபடகும் இங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவுப் படகான இதில் பயணம் செய்ய ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இடுக்கி அணையில் படகு சவாரி செய்ய விரும்புவோர் தங்களுடன் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற, போட்டோவுடன் கூடிய ஏதாவது அடையாள அட்டை ஒன்றை அவசியம் கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுது தான் அனுமதி கிடைக்கும். தென் மாவட்டங்களிலிருந்து, செங்கோட்டை, பனையூர் வழியாகவும், கம்பம் போடி வழியாகவும் இடுக்கி செல்லாம்.