நடிகர் பிரகாஷ்ராஜ் காஞ்சிவரம் படத்தின் மூலம் 3வது முறையாக தேசிய விருது வாங்க உள்ளார். மேலும், காஞ்சிவரம் திரைப்படம் இரண்டு விருதுகளை தட்டிச் செல்கிறது.
திரைப்படம் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்களுக்கான தேசிய விருதுகள் திங்கட்கிழமை (செப்.7) அன்று அறிவிக்கப்படுகின்றன. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு பிரகாஷ்ராஜ் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “காஞ்சிவரம்” படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் இப்படம் தட்டிச்செல்கிறது. மொத்தம் இரண்டு விருதுகள் கிடைக்கின்றன.
காஞ்சிவரம் படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ஏற்கனவே சர்வதேசபட விழாக்களில் காஞ்சிவரம் படம் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்துள்ளது. 2008 செப்டம்பர் டொரண் டோவில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது. சுதந்திரத்துக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியில் வாழ்ந்த நெசவாளர் குடும்பங்களின் கஷ்டங்களை சித்தரிக்கும் கதையே இப்படம்.
பிரகாஷ்ராஜ் தந்தை கேரக்டரில் நடித்துள்ளார். ஆங்கிலேயர்களிடம் கூலிக்கு நெசவுத் தொழில் செய்யும் அவர் மகள் திருமணத்துக்காக ஒரு பட்டுச்சேலை சொந்தமாக செய்யப்படும் அவஸ்தைகளை நடிப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.
பிரகாஷ்ராஜூக்கு இது மூன்றாவது தேசிய விருது ஆகும். முன்பு “இருவர்” மற்றும் “தயா” படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதுகளை பெற்றார். அமீர்கான் (தாரே ஜமீன்பர்), ஷாருக்கான் (சக்தே இந்தியா), போன்றோரும் விருது பட்டியலில் உள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் திரைப்பட விழா இயக்குனரக டைரக்டர் எஸ்.எம்.கான் தெரிவித்துள்ளார்.