
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி வருடம் தோறும் குறைந்துகொண்டே வருகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 2006-07ம் நிதியாண்டில் 58லட்சத்து 65ஆயிரத்து 585டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 83மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. கடந்த 2007-08ம் ஆண்டில் கூடுதலாக 3 லட்சத்து 30 ஆயிரத்து 532 டன் நிலக்கரி உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் மின்சார உற்பத்தியோ 2006-07ம் ஆண்டைவிட 108.91 மில்லியன் யூனிட் குறைவாகவே 2007-08ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பர்னஸ் ஆயில் பயன்பாடும் 2006-07ம் ஆண்டைவிட 2007-08ம் ஆண்டில் அதிக அளவு இருந்துள்ளது. 2006-07ம் ஆண்டு 14ஆயிரத்து 297கி.லி. பர்னஸ் ஆயிலும், 2007-08ம் நிதி ஆண்டில் 23 ஆயிரத்து 550 கி.லி. பர்னஸ் ஆயிலும் உபயோகிக்கப்பட்டுள்ளன.
2006-07ம் ஆண்டைவிட 2007-08ம் நிதியாண்டில் சுமார் 5.6 சதவீத நிலக்கரியும், சுமார் 65 சதவீத பர்னஸ் ஆயிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டும் 108.91 மில்லியன் யூனிட் மின்சாரம் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-09ம் நிதியாண்டில் 7 ஆயிரத்து 850 மில்லியன் யூனிட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட சுமார் 124 மில்லியன் யூனிட் குறைவானதாகும். இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய 58லட்சத்து 9ஆயிரத்து 457 டன் நிலக்கரியும்,26ஆயிரத்து 869 கிலோ லிட்டர் பர்னஸ் ஆயிலும் உபயோகிக்கப்பட்டுள்ளது.
2006-07ம் ஆண்டைவிட 2007-08ம் நிதியாண்டில் 108.91 மில்லியன் யூனிட் குறைவாக மின்சாரம் உற்பத்தி நடந்துள்ளது. அதுபோல 2007-08ம் ஆண்டைவிட 2008-09ம் நிதியாண்டில் 124.05 மில்லியன் யூனிட் மின்சாரம் குறைவாகவே உற்பத்தி ஆகியுள்ளது.
நவீன தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும் வேளையில் மின் உற்பத்தி வருடந்தோறும் கணிசமான அளவு குறைந்து வருவதற்கான காரணம் குறித்து தலைமை பொறியாளர் ஆனந்தை தொடர்பு கொள்ள முயன்றபோது, பத்திரிக்கைகளுக்கு எவ்வித பேட்டியோ, விளக்கமோ கொடுக்க கூடாது என்று மின்சாரத் துறை அமைச்சகம் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையான மின்சார பற்றாக்குறையினால் தமிழகம் திண்டாடி வரும் வேளையில்,அனைத்து மாவட்ட பகுதிகளிலும் தினமும் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை மின் வெட்டு செய்யப்படுகிறது. இப்படி தொடர் மின் வெட்டினால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வரும் வேளையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் உற்பத்திக் குறைவிற்கு யார் பொறுப் பேற்கப்போகிறார்கள்?அரசின் நடவடிக்கை என்ன? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனல் மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது என்று எதிர்க் கட்சிகள் புகார் தெரிவித்து வரும் வேளையில், இது குறித்து விளக்கம் கொடுப்பதற்கு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி கூட இல்லாதது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.