News

தூத்துக்குடி தனியார் மருத்துவமனைகளில் குறைந்து வரும் பிரசவங்கள்! அதிர்ச்சி தகவல்
September 12, 2009, 6:14 PM

தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை வருடந்தோறும் குறைந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் 2005-06ம் ஆண்டு 11,878 பிரசவங்கள் நடந்துள்ளன. 2006-07ம் ஆண்டில் 2005-06ம் ஆண்டைவிட 607 பிரசவங்கள் குறைவாகவும், 2006-07ம் ஆண்டில் 2005-06ம் ஆண்டைவிட 443 பிரசவங்கள் குறைவாகவும் நடந்துள்ளது. கடந்த 2008-09ம் நிதியாண்டில் 9,624 பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 1,204 குறைவாகும்.

அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களோடு ஒப்பிடுகையில் 2005-06ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் 48% பிரசவங்க்ள் நடந்துள்ளன. இது படிப்படியாக குறைந்து 2008-09ம் ஆண்டு 36%க்கு வந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் குறைந்துவரும் பிரசவ எண்ணிக்கை குறித்து தூத்துக்குடி பகுதி வங்கி ஊழியர் ரெக்ஸி கூறும்போது, தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கான கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. நார்மல் டெலிவரிக்கு கடந்த வருடம் 5ஆயிரம் ரூபாய் வசூலித்தார்கள். இப்போது 8ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

அதுபோல சிசேரியனுக்கு கடந்த ஆண்டு 18ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் இப்போது 25ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாது 100 சதவீத பாதுகாப்பு கருதி தனியார் மருத்துவ மனைகளில் சிசேரியன் மூலமே பிரசவங்கள் நடக்கின்றன. இது ஒரு பெரிய தொகையாக இருப்பதால் நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக செல்கின்றனர் என்றார்.

அரசு மருத்துவமனையிலும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2005-06 ஆண்டு 44 சதவீதமாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2008-09ம் ஆண்டு 39 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிசங்கரிடம் கேட்டபோது, ஆரம்ப சுகாதார மையங்களில் ஜெனனி சுபக்ஷா யோஜனா போன்ற திட்டங்களின்கீழ் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று கூறினார்.

கடந்த 2005-06ம் ஆண்டு தூத்துக்குடி ஆரம்ப சுகாதார மையங்களில் 997 பிரசவங்கள் மட்டுமே நடந்தன. இது படிப்படியாக உயர்ந்து 2008-09ம் ஆண்டு 5,739 ஆக அதிகரித்துள்ளது. 2005-06ம் ஆண்டு 4 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2008-09ம் ஆண்டு 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து தூத்துக்குடி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் உமாவிடம் கேட்டபோது, ஆரம்ப சுகாதார மையங்களில் லேப்ராஸ்கோபி மூலம் கருத்தடை செய்வதற்கான வசதி, குழந்தை பிறந்த பின் கருத்தடை ஆபரேஷன் செய்வதற்கான வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டுபிடிக்கும் செமி ஆட்டோ அனலைசர் கருவி போன்ற பல வசதிகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை தோறும் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்குவதுடன் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளும் நாங்களே நடத்துவதால் ஒரு குடும்பம் போன்ற சூழ்நிலை இங்கு உருவாகிறது.

மாநில அரசு அளிக்கும்முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவியுடன், மத்திய அரசு வழங்கும் ஜெனனி சுபக்ஷா யோஜனா நிதி உதவியும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுவதுடன், 24மணி நேரம் சேவை புரிவதால் ஆரம்ப சுகாதார மையங்களில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று டாக்டர் உமா தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு பிரசவத்திற்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததற்கு பொருளாதார சுமை ஒரு காரணமாக இருந்தாலும், ஆரம்ப சுகாதார மையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வசதிகளே அநேக கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு இங்கு வருவதற்கு காரணமாக உள்ளது. தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாராட்டுக்கள்!
 
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பிரசவ எண்ணிக்கை விகிதம்

வருடம்

ஆரம்ப சுகாதார நிலையம்

அரசு மருத்துவமனை

தனியார் மருத்துவமனை

2005 - 06

997

4%

10,956

44%

11,878

48%

2006 - 07

1,124

4%

11,974

45%

11,271

48%

2007 - 08

2,668

11%

9,660

45%

10,828

41%

2008 - 09

5,739

24%

8,806

39%

9,624

36%

எஸ்.பேச்சிமுத்து

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.