News

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டலாம்! பரபரப்பு தகவல்!
September 18, 2009, 1:14 PM

 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கு பல விதிமுறைகள் உண்டு என்றும் அவற்றை தமிழக போலீசார் முறையாக கடைபிடிப்பதில்லை என்றும் தூத்துக்குடி வழக்கறிஞர் த.விஜயசுந்தர் தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் அளித்த விசேஷ பேட்டியில் கூறியதாவது,  100மிலி இரத்தத்தில் 30மிகி எத்தில் ஆல்கஹால் என்ற அளவிற்கு மிகாமல் இருக்கும் அளவிற்கு மது அருந்திக் கொண்டு வாகனம் ஓட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டம் 185/1994 அனுமதி அளித்துள்ளது.

 

மது அருந்தியிருப்பதாக சந்தேகப்படும் ஓட்டுநர்களை சோதனை செய்யும் உரிமை சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் பதவியிலிருக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. போலீஸ் கான்ஸ்டபிள் தனியாகச் சென்று சோதனை செய்வதற்கு அதிகாரம் இல்லை.

 

ஒரு வாகன ஓட்டுநர் மது அருந்தியிருப்பதாக போலீசார் கருதினால் பலூன் டெஸ்ட், டிரன்கோ மீட்டர், இன்டாக்ஸி மீட்டர், அல்கோ மீட்டர், பிரீத் அனலைசர் போன்ற ஏதாவது ஒரு கருவியில் ஊதச் சொல்லுவதன் மூலம் கண்டறியலாம்.

 

நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒருவர் மது அருந்தியிருப்பாரேயானால் வாய் ஊதும் போது உள்ளே இருக்கும் கெமிக்கல் பொருள் பச்சை நிறமாக மாறும். இவ்வாறு முதற் கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்ட ஓட்டுநர்கள் மட்டுமே ரத்த பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

 

ஆனால் இந்த நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல் வழக்குப் பதிவு செய்துவிட்டு ஸ்டேஷன் ஜாமீனில் அனுப்பி விடுகிறார்கள். பெரும்பாலான ஓட்டுநர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதத் தொகையான ரூ.2000 செலுத்தி விடுகின்றனர்.

 

அதிக அளவு மது அருந்தியவர்களுக்கு, முதல் தடவை என்றால் ரூ.2000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனையும், 3 வருடத்திற்குள் 2வது முறையாக மது அருந்தி மாட்டிக் கொள்பவர்களுக்கு ரூ.3000 அபராதத்தோடு 2வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது. இவ்வாறு வக்கீல் விஜயசுந்தர் தெரிவித்தார்.

 

தூத்துக்குடியிலுள்ள ரத்த பரிசோதனை மைய ஊழியர் ஒருவர் இது குறித்து கூறும்போது, இரத்தத்தில் ஆல்கஹால் இருப்பதை கண்டறியும் தனியார் பரிசோதனை மையம் தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டுமே உள்ளது. தூத்துக்குடியில் இல்லை.

 

பீரில் 4 முதல் 11 சதவீதமும், பிராந்தி, விஸ்கியில் 40 முதல் 45 சதவீதமும், ரம்மில் 50 முதல் 60 சதவீதமும் ஆல்கஹால் உள்ளது. சராசரி மனித உடலில் 6000மிலி ரத்தம் உள்ளது. 180மிலி அளவுள்ள ஒரு குவாட்டர் பிராந்தி குடிப்பதால் நூற்றுக்கு 60மிகி என்ற அளவில் ஆல்கஹால் ரத்தத்தில் சேர்கிறது.

 

ஆகவே அரை குவார்டர் வரை பிராந்தி குடிப்பதோ அல்லது ஸ்ட்ராங் இல்லாத பீர் ஒரு பாட்டில் குடிப்பதோ 100மிலிக்கு 30மிகி என்ற அளவை தாண்டாது. ஆகவே இந்த அளவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தவறல்ல என்று அவர் கூறினார்.

 

இது குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டபோது, தூத்துக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் அளித்த தகவலில், சிறிதளவேனும் கூட மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட அனுமதி இல்லை என்றும், வாகன ஓட்டுநர்களை போலீஸ் கான்ஸ்டபிள்கள் சோதனை செய்ய அதிகாரம் உண்டு என்றும் காவல் உட்கோட்ட அதிகாரிகளிடத்திலும் காவல் நெடுஞ்சாலை துறையிடமும் ப்ரீத்திங் அனலைசர் கருவி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ்.பேச்சிமுத்து

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.