திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்தவர் பா.மாரியப்பன், சிறு வயது முதல் தச்சு வேலை செய்து வருபவர். இவரது தந்தை ஸ்தபதி பாண்டியன் கோயில்களுக்கு சிற்பங்கள், ஓவியங்கள் வடிப்பதில் திறமையானவர்.
தனது தந்தையிடம் இருந்து பா.மா. 10 வயது முதல் சிற்ப கலை நுட்பத்தையும், கலை வேலைபாட்டையும் திறம்பட கற்றுத் தேர்ந்ததன் விளைவாக நுண்ணிய கலை பொருட்களை வித்தியாசமாக தயாரிப்பதில் ஈடுபட்டார். நாம் பயன்படுத்திய பின்னர் விட்டெறியும் தேங்காய் சிறட்டை மற்றும் மிகச் சிறிய மரத்துண்டுகளைக் கூட தனது கலைத் திறனைப் பயன்படுத்தி விலையுயர்ந்த கலைநயமிக்க பொருளாக மாற்றி விடுவார்.
சிறுவயது முதல் பகுத்தறிவு சிந்தனை உடைய இவர், அறிவியல், விஞ்ஞானம் சம்பந்தமான நூல்களைப் படித்து மக்களின் மூடப் பழக்கவழக்கங்களை மாற்ற "அறிவியல் நிந்தனைகள்" என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புத்தகத்திற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பாரட்டையும் பெற்றுள்ளார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த சிற்பி பாமா, படித்த வல்லுநர்கள் பாராட்டும் அளவிற்கு திறமையை வளர்த்துள்ளது மிகவும் ஆச்சர்யப்பட தக்கதாகும்.
இவர் பள்ளி, கல்லூரிகளுக்குத் தேவையான அறிவியல் கருவிகளின் மாதிரிகளையும் செய்து கொடுத்து வருகிறார். ஜாதி, மத சன்டைகளை மக்களிடம் இருந்து விடுவிக்க சமய நல்லினக்க சிற்பங்களையும், பெரியார், புத்தர், அப்துல் கலாம், அறிவியல் மேதைகள் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், ஐன்ஸ்டீன் போன்றோர்களின் சிற்பங்களையும் கலை நயத்தோடு படைத்துள்ளார்.
மரச் சிற்பங்களை தனது தொழிற்கூடத்தில் பார்வைக்காக வைத்துள்ளார். இவர், வரலாற்று கதாபாத்திரங்கள், மகாபாரத போர் போன்ற காட்சிகளையும் மரச் சிற்பங்களாக வடித்துள்ளார். நாகர்கோவில் கைவினை பொருள் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் படைத்த அறிவியல் சம்மட்டி என்னும் மரச் சிற்பம் 2001ம் ஆண்டு தேசிய விருது கோரி தமிழக அரசு சிபாரி செய்துள்ள நிலையில் இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லையாம்.
இவரது அடுத்த படைப்பான "பொருள் தோற்றம் குறித்த மனத் தீர்வுகள்" என்ற தலைப்பிலான புத்தகத்தினை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் வெளியிட முயற்சித்து வருகிறார். "அறிவியல் சிந்தனை சிற்பி பாமா", மேலும் பல கலை நயம் மிக்க படைப்புகளை உருவாக்கி நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை.