News

கொசு தொல்லையை கட்டுப்படுத்த புதிய வகை கொசு அறிமுகம்
September 26, 2009, 11:05 AM
 
நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த புதிய வகை கொசுக்களை சென்னை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர் என்று தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிசங்கர் தெரிவித்தார்.

மலேரியா நோயினால், உலகம் முழுவதும் வருடத்திற்கு 300மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒன்று முதல் மூன்று மில்லியன் பேர் இறந்து விடுகின்றனர்.

உலக மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவை மட்டுமல்லாது சிக்கன்குனியா போன்ற நோய்களையும் கொசுக்களே பரப்புகின்றன.

கொசுக்களைக் கட்டுப்படுத்த நாம் பயன்படுத்தும் கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்யுட் மற்றும் ஸ்பிரேயர் போன்றவை உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை. ஆகவே, நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த புதிய வகை கொசுக்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் சென்னை அருகில் படப்பையில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ டெக்னாலஜி (IIBAT) பரிசோதனை மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிசங்கர் நமது இனையதளத்திற்கு அளித்த விஷேச பேட்டியாவது; குறிப்பிட்ட வகை பெண் கொசுக்களே மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்புகின்றன. ஆகவே, இத்தகைய நோய்களை பரப்புவதற்கு சக்தி இல்லாத வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களை உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இத்தகைய ஆண் கொசுக்கள், மரபணு மாற்றம் செய்யப்படாத பெண் கொசுக்களோடு புணரும்போது உற்பத்தியாகும் புதிய கொசுக்களுக்கு நோய்களை பரப்பும் வீரியம் குறைவாக இருக்கும். ஒருசில தலைமுறைகள் கழிந்த பின் உருவாகும் புதிய கொசுக்களினால் இத்தகைய நோய்களை பரப்ப முடியாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை அடையாளம் காணும் விதமாக அவற்றின் கண்கள் பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை உடையதாக இருக்குமாறு மரபணுவில் மாற்றம் செய்துள்ளனர்.

இந்தியா உட்பட 10 நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மூன்று நிலைகள் உள்ள இந்த ஆராய்ச்சியில் தற்போது இரண்டாம் நிலையை விஞ்ஞானிகள் அடைந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மூன்றாம் நிலையை அடையும்போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை திறந்து விட்டு பரிசோதனை நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆராய்ச்சி முழு வெற்றி அடையுமா என்று உறுதியாக என்னால் கூற முடியவில்லை. இதில் வெற்றி அடைந்தால் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவுவது பெருமளவிற்கு குறைய வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.

எஸ்.பேச்சிமுத்து

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.