இரண்டாவது மனைவியை சேர்த்துவைக்க கோரி போலீசாரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் 3 மாடி கட்டிடத்தில் உள்ள 150 அடி விளம்பர போர்டு ஹோடிங்கில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த முடியப்பன் என்பவரின் மகன் காட்டுராஜா(41). இவர், உப்பளத்தில் வேலை செய்து வருகிறார். முதல் மனைவி இறந்துவிட்டதால், தற்போது இரண்டாவது மனைவியான சித்ரா(27)வுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர், இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி தென்பாகம் போலீசில் அருகில் உள்ள இந்திய வங்கி கட்டிட வளாகத்தில் 2வது மாடியின் மேல் உள்ள 30 அடி வணிக விளம்பர போர்டு ஹோடிங்கில் மண்ணெண்ணெய் கேனோடு திடிரென ஏறினார்.
பின்னர், அங்கிருந்து தான் கொடுக்கும் புகாரை போலீசார் கண்டு கொள்வது இல்லை என கூறி அவரது உடலின் மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அருகில் உள்ள தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை சாமாதான படுத்தி கீழே இறங்குமாறு கூறினர். அதனையடுத்து, கீழே இறங்கினார். பின்னர், அவரிடன் எதற்கு கம்பிமேல் ஏறினாய் என்று போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, நான் கடந்த 10 ஆண்டுகளாக தென்பாகம் போலீசில் புகார் செய்து வருகிறேன்.
ஆனால், அதற்கு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். தற்போது, அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் பெயரை சொல்லி தனது மனைவி விபச்சாரம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், நான் சித்ராவை 2வது திருமணம் செய்து கொண்டேன். ஆனால், சித்ராவுக்கு என்னுடன் நடந்தது 3வது திருமணம். எனக்கு ஸ்ரீராம்(9) என்ற மகனும், ரம்யஸ்ரீ(2) என்ற மகளும் உள்ளனர்.
தற்போது எனது மனைவியை போல்டன்புரத்தில் கடத்தி வைத்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், காட்டுராஜாவிடம் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் விசாரணை நடத்தி வருகிறார். மண்ணெண்ணெய் ஊற்றிய ஆடைகளோடு இருந்த காட்டுராஜாவை போலீசார் குளிக்க வைத்து, புதிய ஆடைகள் வாங்கி கொடுத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் கீழே இருந்து 150 அடி உயரத்தில் இருந்து தற்கொலை செய்து கொள்வதாக காட்டுராஜாவின் ரகளையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.