செல்போன் ராங்கால் மூலம் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ள ஆசை பட்டு, திருமணமான இளைஞரை தேடி சென்ற இளம் பெண்ணை காதலனே, காதலியின் சொந்த ஊரில் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் கீழத்தெருவை சேர்ந்த சண்முகம் மகன் வேலுச்சாமி(45). இவரின் மகள் முருகலட்சுமி(20) கரிசல்குளத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்,முருகலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொள்ளும் போது, வேலூரில் அலுமினியம் உருக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த பாக்கியராஜ் என்பவரின் செல்போனுக்கு ராங்காலாக சென்றுள்ளது.
இந்த ராங்கால் தொடர்பில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதல்கோட்டை படம் போல் பார்க்காமலே காதல் ஏற்பட்டுள்ளது. பல நாட்கள் செல்போனிலே காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில், முருகலட்சுமி காதலனை தேடி வேலூருக்கு கடந்த 5ம் தேதி காலையில் பஸ் ஏறி சென்றுள்ளாள். அங்கு, காதலன் பாக்கியராஜை சந்தித்துள்ளாள். இருவரும் 2 நாட்கள் சேர்ந்து வாழ்ந்த பின், காதலனுக்கு திருமணமாகி மனைவி இருப்பது முருகலட்சுமிக்கு தெரியவந்தது.
இந்த காதல்விவகாரம் பாக்கியராஜின் மனைவிக்கும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாக்கியராஜின் மனைவியின் அறிவுறுத்தலின் படி விளாத்திகுளம் போலீசில் வேலூர் வாலிபர் பாக்கியராஜ் முருகலட்சுமியை ஓப்படைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து புதூர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி வருகிறார்.செல் போன் காதலனே, காதலியின் சொந்த ஊரில் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.