திண்டுக்கல் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவர் 68.5 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையை பல்லால் கடித்து 40 விநாடிகள் தூக்கி நிறுத்தி புதிய உலக சாதனையை செய்துள்ளார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிராங்க் சைமன் என்பவர் 17.5.2007 அன்று ரோம் நகரில் 63.5 கிலோ எடை கொண்ட ரெப்ரெஜிரேட்டரை பல்லால் கடித்து 10 விநாடிகள் தூக்கி நிறுத்தியது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த சாதனையை முறியடிப்பதற்காக திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் மாரியப்பன் நேற்று, திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வைத்து 68.5 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையை பல்லால் கடித்து 40 விநாடி தூக்கி நிறுத்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சின்னசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பள்ளித் தலைமை ஆசிரியர் இக்னேஷியஸ் பிரிட்டோ, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எஸ். பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், என்னுடைய இந்தப் புதிய சாதனை கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான க்ளைம் ஐடி (255772), மெம்பர்ஷிப் எண் (217107) எனக்கு வழங்கப்பட்டுள்ளது. என்னுடைய இந்த சாதனைக்குச் சாட்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சின்னசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். முருகன் ஆகியோர் சான்று அளித்துள்ளனர்.
இதைத் தவிர, தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்கள், பள்ளி மாணவர்கள் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. செய்தித்தாள்களில் வரும் செய்தி மற்றும் புகைப்படங்கள், விடியோ கிளிப்பிங்குகள் இவற்றை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். இவற்றை சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்னர் கின்னஸ் புத்தகத்தில் என்னுடைய சாதனை இடம்பெறும் என்றார் அவர்.
முன்னதாக விழாவில் மாரியப்பன் ஏற்புரை ஆற்றிப் பேசுகையில், மன ஒருமைப்பாடும், தைரியமும் இருந்தால் சாதனைகள் புரியலாம். ஒவ்வொருவரிடமும் தனித் திறமைகள் உள்ளன. திறமைகளை அடையாளம் கண்டு மேம்படுத்தினால் சாதனைகள் புரியலாம் என்றார்.