News

இலங்கையில் அசாதாரண சூழ்நிலை: தூத்துக்குடியில் கடற்படைத் தளம்!
December 4, 2009, 11:08 AM

நாட்டின் கடல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தூத்துக்குடியில் 120 ஏக்கரில் கடற்படைத் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளால், தமிழக கடல் பகுதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் 120 ஏக்கரில் கடற்படைத் தளம் அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளை கடற்படை உயர்அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

கடற்படைத் தளம் அமைப்பதற்கு, தூத்துக்குடி துறைமுக சபையிடம் இந்திய ராணுவம், இடம் கேட்டுள்ளது. அதன்பேரில், தூத்துக்குடி துறைமுக அலுவலகத்திற்கும், கடலோர காவல்படை அலுவலகத்திற்கு இடையேயான பகுதி உட்பட, 3 இடங்களில் கடற்படைத் தளம் அமைக்க தூத்துக்குடி துறைமுக சபை பரிந்துரை செய்துள்ளது.

இதில், குறிப்பிட்ட இடத்தை சில நாள்களுக்கு முன்பு கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் சில குறைபாடுகள் இருந்ததினால் அதை கடற்படை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இன்னும் 2 இடங்களை கடற்படை அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்வார்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கடற்படைத் தளம் அமைப்பதற்கு குறைந்தது 120 ஏக்கர் நிலப் பரப்பளவு ஒரே இடத்தில் இருக்க வேண்டும், அந்த நிலப்பரப்பைச் சுற்றி குறிப்பிட்ட தொலைவு வரை மின் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள் இருக்கக் கூடாது. இது போன்ற காரணங்களால் இடத்தை தேர்வு செய்வதில் சில இடர்பாடுகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி பகுதியில் 120 ஏக்கர் நிலம் மொத்தமாகவும், தேவையான கட்டமைப்பு வசதிகளுடனும் கிடைக்கவில்லையெனில், தூத்துக்குடி கடல் பகுதியில் இருக்கும் தீவுகளில் இந்த தளத்தை அமைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான ஆய்வை கடற்படை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

புதிதாக அமையவுள்ள கடற்படைத் தளம் மூலம் இப்பகுதி கடலோர பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்படும். இக் கடற்படை தளம், திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைத் தளத்துக்கு கீழ் இயங்கும் என தெரிகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த ஓராண்டுக்குள் கடற்படை தளம் செயல்படத் தொடங்கும்.

இந்த படைத் தளம் மூலம் சுமார் 25 கடல் மைல் தொலைவில் செல்லும் கப்பல்கள், படகுகளைக் கண்காணிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் மூலம் அப்பகுதியில் செல்லும் கப்பல், படகுகளில் என்ன பொருள்கள் இருந்தாலும் ஊடுருவிப் பார்க்க முடியும்.

ஐஎன்.எஸ். கட்டபொம்மன் கடற்படைத் தளம் இதுவரை தகவல்களைப் பெறுவது, அனுப்புவது ஆகிய பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. தூத்துக்குடியில் அமையவுள்ள கடற்படை தளம் மூலம் கண்காணிப்பு பணியிலும் முதல்முறையாக ஈடுபடபோகிறது.

செல்வா, திருநெல்வேலி

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.