நகைக்காக ஊனமுற்ற வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்து, முதலிரவில் கம்பிநீட்டிய மோசடி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காட்டைச் சேர்ந்தவர் வில்லிமுத்து. இவரது மகன் பட்டுராஜ் (29). இவருக்கு இரு கால்களுமே ஊனம். இவர் தற்போது சென்னையில் காய்கறிக் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். பட்டுராஜிற்கு திருமணம் செய்யவதற்காக, மணமகள் தேவை என செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
வரதட்சனை தேவையில்லை என்றும், விதவை பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் தொடர்பு கொள்ளலாம் என விளம்பரத்தில், குறிப்பிடப்பட்டிருந்தது. விளம்பரத்தை பார்த்த திருமண புரோக்கர் வைத்தீஸ்வரன் என்பவர், தன்னிடம் ஒரு வரன் உள்ளது என பட்டுராஜை அனுகி ஒரு பெண்ணின் போட்டோவையும் அவர் காட்டியுள்ளார். மேலும், திருமணத்திற்ககாக பெண்ணிற்கு 10சவரன் நகை போட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து, பெண் பிடித்துப்போகவே, நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பட்டுராஜ் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதனையடுத்து கடந்த 3ம் தேதி திருச்செந்தூரில் வைத்து பட்டுராஜிற்கும், ரதி தேவி என்ற அந்த பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. பட்டுராஜ் அப்பெண்ணிற்கு 4.5பவுன் தங்க செயின் போட்டுள்ளார். மீதமுள்ள நகைகளை விரைவில் போடுவதாக தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு ஏற்பாடு செய்த புரோக்கர் அதற்குரிய கமிஷனை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் 3ம் தேதி இரவு, ரதிதேவி கணவனிடம் சில காரணங்களைச் சொல்லி முதலிரவை தள்ளிப்போட்டுள்ளார். அதன்பின்னர் பட்டுராஜ் அயர்ந்து தூங்கி கொண்டிந்த போது, ரதிதேவி 4.5சவரன் தங்க செயினுடன் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். தீடிரென விழித்துப் பார்த்த பட்டுராஜ், ரதிதேவி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து ஊரில் உள்ள சிலருக்கு தகவல் அளித்து உமரிக்காடு பஸ்நிலையத்தில் ரதிதேவியை மடக்கிப் பிடித்தனர். அங்கு அவரை விசாரித்ததில், நகை மோசடி செய்வதற்காக புரோக்கருடன் சேர்ந்து மோசடி நாடகம் ஆடியது தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் ரதிதேவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரதிதேவி மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குருமூர்த்தி என்ற கணவரும், இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ரதி தேவியை கைது செய்த ஏரல் போலீசார், மேலும் இவ்வழக்குத் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். தற்போது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த புரோக்கர் வைத்தீஸ்வரனை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
இரண்டு கால்களும் செயலிழந்த ஊனமுற்ற வாலிபரை ஏமாற்றி நகை பறித்து, அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய பெண்ணை அப்பகுதி மக்கள் வசைபாடி தீர்த்தனர். மேலும், புரோக்கருக்கும், அந்த மோசடி பெண்ணிற்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.