சிங்கபூரில் கழிவுநீர் ஓடைகள் சுத்தமாக இருப்பதை போல, சென்னையில் உள்ள கூவம் ஆற்றையும் சுத்தமாக மாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் விரும்பினார். இதற்காக சிங்கபூருக்கு விசேஷ பயணம் சென்று, அங்குள்ள கால்வாயில் படகு பயணமும் செய்து வந்தார்.
கூவம் ஆற்றை சுத்திகரிப்பதற்காக 1200கோடி ரூபாய் திட்டத்தை உடனடியாக அறிவித்தார். கூவம் சுத்திகரிப்பு திட்டம் ஏற்கனவே கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, பலகோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டது. 1970களில் கூவத்தை சுத்தப்படுத்தி, அதில் படகு ஓட்டுவோம் என்று திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, கூவம் ஆற்றில் பல படகு துறைகளும் கட்டப்பட்டன. இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
தற்போது ஸ்டாலின் அறிவித்துள்ள கூவம் சுத்திகரிப்பு திட்டம் வெற்றி பெறுமா என்பதை அறிய நாமும் சிங்கபூர் சென்று வந்தோம். படகு பயணம் செல்லும் அளவுக்கு அங்குள்ள கழிவுநீர் ஓடை சுத்தமாக இருப்பதற்கான காரணத்தை காணமுடிந்தது.
சிங்கபூரில் கைகளைக் கழுவும் வாஷ்பேஷின் மற்றும் பாத்திரங்களை கழுவும் சிங் போன்றவற்றின் அடியில் பாட்டில் டிராப் அல்லது வேஸ்ட் கப்லிங் எனப்படும் ஃபில்ட்டர்கள் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டமாகும். பாத்ரூமிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்களிலும் இதுபோல ஃபில்ட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வீடுகள், ஹோட்டல்கள், ஆபிஸ்கள் போன்ற எல்லா இடங்களிலும் இந்த ஃபில்ட்டர்கள் இருப்பதால், கழிவுப் பொருட்கள் சாக்கடைக்குள் கலப்பதை இவை தடுத்து விடுகின்றன. தண்ணீர் மட்டுமே சாக்கடைக்கு வருகிறது. ரோடு ஓரங்களில் சாக்கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டு உள்ளன. மழைநீர் சாக்கடையில் வடிவதற்கான பைப்களிலும் ஃபில்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சாக்கடைகள் கழிவுநீர் ஓடையில் கலக்கும் பகுதிகளிலும் ஃபில்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கழிவுநீர் ஓடைகளிலும் திடக் கழிவுகளை ஃபில்ட்டர் பண்ணுவதற்காக ஆங்காங்கே நவீனவகை ஃபில்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை ஃபில்ட்டர்கள் இருப்பதாலும், கழிவு பொருட்களை குப்பைத் தொட்டியில் போடாமல் தெருவில் போட்டால் கடுமையான தண்டனை என்ற சட்டம் இருப்பதாலும் மட்டுமே அங்குள்ள கழிவுநீர் ஓடை சுத்தமாக உள்ளது.
சிங்கப்பூரில் மனித கழிவுகள் வெளியேறுவதற்கு தனியாக பைப்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த பகுதியிலும் அவை கால்வாய்களில் கலப்பதில்லை.
ஆனால், சென்னை நகருக்குள் கூவம் ஆறு நுழைவதற்கு முன்பாகவே வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் உள்ள கழிவுகள் கூவத்தில் கலக்கின்றன. சென்னைக்கு முன்பாகவே சுமார் 50கிமீ நீளத்திற்கு இவ்வாறு கழிவு நீர் கலப்பதால் கூவம் நதி சாக்கடையாக மாறித்தான் சென்னை நகருக்குள் நுழைகிறது. ஆகவே சென்னையில் மட்டும் கூவத்தை சுத்தப்படுத்துவதினால் பயன் ஒன்றும் இல்லை.
சிந்தாதிரிப்பேட்டை போன்ற கூவத்தை ஒட்டி அமைந்துள்ள பல பகுதிகளில், வீடுகளில் உள்ள கழிவுகள் அனைத்தும் நேரிடையாக கூவத்தில் சேருகின்றன. இவ்வாறு சேரும் கழிவுகளை நிறுத்துவதற்கு வழி காணாமல் கூவத்தை சுத்தப்படுத்துவதற்கான திட்டத்தை அறிவிப்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதான்.
சிங்கபூரில் உள்ளது போல தமிழகத்திலும் கழிவு நீர் ஃபில்ட்டர்கள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தால் கூவம் போன்ற பல நதிகள் தானாகவே சுத்தமாகிவிடும். தற்போது ஸ்டாலின் அறிவித்துள்ள 1200கோடி ரூபாய் கூவம் சுத்திகரிப்பு திட்டம் கான்ட்ராக்டர்களுக்கு மட்டுமே உதவுமே தவிர கூவத்தை நிரந்தரமாக சுத்தப்படுத்த உதவாது.