உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து அட்டகாசமான இரு வெற்றிகளைக் கொடுத்துள்ளார் கமல் ஹாசன். தசாவதார பிரமிப்பே இன்னும் மறையாத நிலையில் உன்னைப் போல் ஒருவன் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளார் கமல்.
இந்த ஆண்டின் பிரமாண்ட வசூலைக் கொடுத்த படம் என்ற பெயரை உன்னைப் போல் ஒருவன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்த கட்ட வேலைகளுக்குப் போய் விட்டார். அடுத்து தான் நடிக்கவுள்ள படம் குறித்த விவாதத்தில் அவர் தீவிரமாகியுள்ளார்.
அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போவது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. மிஷ்கின்தான் அடுத்த கமல் படத்தை இயக்கப் போவதாக பரவலாக கூறப்படுகிறது. அதேசமயம், கே.எஸ்.ரவிக்குமாருடனும் கமல்ஹாசன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.
எனவே இவர்களில் யார் கமலின் அடுத்த பட இயக்குநர் என்பது எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. கமல்ஹாசனும் ரவிக்குமாரும் இணைந்து இதற்கு முன்பு கொடுத்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் என்பது நினைவிருக்கலாம். கடைசியாக கொடுத்த பிரமாண்டப் படம் தசாவதாரம்.
அதேசமயம், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய இரு படங்கள் மூலம் கோலிவுட்டைப் புரட்டிப் போட்டவர் மிஷ்கின். அவர் நடித்துள்ள நந்தலாலா படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசன் பார்த்து வெகுவாகப் பார்ட்டியுள்ளார்.
எனவே, இயக்குவது யாராக இருந்தாலும் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் படமாகவே இருக்கும் என்பது உறுதி.