தமிழகத்தின் தென்பகுதியான தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படங்கள் அமோகமாக வெற்றி பெறுகிறது. இதனால் திரைப்படத் தயாரிப்பாளரின் பார்வை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பக்கமே. தற்போது ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சிங்கம் சினிமா படபிடிப்பு தூத்துக்குடியில் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த மன்னின் மைந்தர்கள் தயாரிக்கும், "அண்ணாச்சி இது நம்ம கோட்டை" என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடந்தது. தூத்துக்குடி, துறைமுகம் லேபர் காலணியை சேர்ந்த என்.யோகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், திலீப், வினோத் என இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். இதில் திலீப் தூத்துக்குடியை சேர்ந்தவர்.
கதாநாயகியாக கேரளா மாநிலம், திருவணந்தபுரத்தை சேர்ந்த லீமா என்பவர் நடிக்கிறார். 10வது வகுப்பு படிக்கு மாணவியான இவர் நடிக்கும் 4வது படமாகும். இப்படத் துவக்கவிழா தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள போத்தி விநாயகர் கோவிலில் நடந்தது. தமிழக சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இப்படம் குறித்து டைரக்டர் யோகராஜ் கூறுகையில், தூத்துக்குடியில் உருவாகும் இப்படம், முழுக்க "அண்ணாச்சி" என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது. காதல், நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு படமாக உருவாகிறது. அண்ணாச்சி கேரக்டரில் நடிப்பதற்கு நடிகர் பிரபுடன் பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.